search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரசைவாக்கம் கடைகள்"

    புரசைவாக்கத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள 33 கடைகள் மட்டுமே பாதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் நெற்குன்றம்- விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசு ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஆரம்ப கட்டப்பணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் செயல்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாதவரம்-சிறுசேரி இடையேயான வழித்தடத்தில் புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாற்றியமைக்க கோரி அங்குள்ள வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் பாதையில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலும், டவுட்டன் அருகிலும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் புரசைவாக்கம் பகுதியில் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கருதி வியாபாரிகள் தேவையில்லாமல் கடை அடைப்பு போராட்டங்களை நடத்துகின்றனர்.

    ஆனால் உண்மையில் புரசைவாக்கம் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் 33 கடைகளும், 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் மட்டுமே பாதிக்கப்படுகின்றன.

    அதேபோல் டவுட்டன் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் 45 கட்டிடங்கள் மட்டும் பாதிக்கப்படுகின்றன. இந்த கட்டிடத்தில் 144 கடைகள் உள்ளன. இவற்றுக்கான முறையான இழப்பீடு வழங்கப்படும்.

    மாறாக புரசைவாக்கம் மற்றும் டவுட்டன் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் பயனடைவார்கள்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    ×